New blog posts

அழிவின் விளிம்பில் காட்டின் பேருயிர்

2 June, 2020 by Administrator

அழிவின் விளிம்பில் காட்டின் பேருயிர்...

ஜுன் - 5 சுற்றுச்சூழல் தின கட்டுரைகள் அனுப்புவதற்கான விதிமுறைகள்

26 May, 2020 by Administrator

ஜுன் - 5 சுற்றுச்சூழல் தின கட்டுரைகள்...

Corona Awareness
Corona Awareness

28 March, 2020 by Administrator

www.kaadugal.com - Corona Awareness Image

World Water Day
World Water Day

22 March, 2020 by Administrator

www.kaadugal.com - World Water Day Post

தருமபுரி தமிழர் மரபுச் சந்தையில் , சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

12 January, 2020 by Administrator

தர்மபுரி மக்கள் மன்றம் & தருமபுரி கலை...

ஆணைமலையும் யானைகளும்

11 August, 2019 by Administrator

திரு.K.தங்கராஜ் உடுமலைப்பேட்டை , அவர்களின்...

Ram Surendhar Image

31 July, 2019 by Aasaitamil

உலக புலிகள் தினம்

30 July, 2019 by Aasaitamil

உலக புலிகள் தின பதிவு

காடுகள் இணையதளத்தில் உறுப்பினராக ௮ழைப்பு

20 March, 2019 by Administrator

காடுகள் இணையதளத்தில் உறுப்பினராகி தாங்கள்...

காடுகள் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

20 March, 2019 by Administrator

காடுகள் இணையதளத்தை பார்வையிட...

காடுகள் இணையதளம் உங்களை வரவேற்கிறது

26 February, 2019 by Aasaitamil

காடுகள் இணையதளத்தை பார்வையிட வந்திருக்கும்...

View all blog entries →

நமது குறிக்கோள்

உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது!

இயற்கை படைத்த பிற உயிர்களோடும் சேர்ந்தே வாழவேண்டும்!

காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க மாட்டான்!

 காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு

உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும்.


 

நிகழ்வுகள்

நாடு முழுவதுமிருந்து கோவை வந்த சூழல், இயற்கை ஆர்வலர்கள், தென்னக நதிகளின் தாய்மடியான மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க உறுதியேற்றனர். கொஞ்சம் கொஞ்சமாய் பறிபோகும் இயற்கை வளத்தைப் பாதுகாத்து, எதிர்கால தலைமுறைக்கு பாதுகாப்பான பூமியை விட்டுச் செல்வதே இந்த மாநாட்டின் நோக்கமாய் இருந்தது.இயற்கையோடு இணைந்திருந்த வரை, மனிதன் பாதுகாப்பாய் இருந்தான். நாகரிகம், வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை மீதான தாக்குதலைத் தொடங்கினான். ஒரு கட்டத்துக்குமேல் பொறுக்க முடியாத இயற்கை திருப்பித் தாக்கியபோது, அதன் விளைவுகள் மனித இனம் எதிர்பாராத அளவுக்கு இருந்தது. புவி வெப்பமயமாதல், பருவமழை தவறுதல், கடும் வறட்சி, வெள்ளம் என இயற்கையின் சீற்றங்களால், எதிர்காலத்தில் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக நம் பூமி மாறிவிடுமோ என்ற அச்சம் எல்லோர் மனதிலும் வேர்விடத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் மலைத் தொடர்ச்சிகளில் முக்கியமானதாக கருதப்படும் மேற்குத் தொடர்ச்சி மலை, குமரியில் தொடங்கி 1,600 கிலோமீட்டர் நீளம், 1.60 லட்சம் சதுரகிலோமீட்டர் பரப்புடன் குஜராத்தில் நிறைவடைகிறது. தென் மாநிலங்களில் பாயும் பெரும்பாலான நதிகளின் நீராதாரமாகத் திகழும் இந்த மலையை தென்னக நதிகளின் தாய்மடி என்றழைக்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள். ஏறத்தாழ 1,500 மீட்டர் உயரத்துக்கும் மேலே உள்ள சோலைக்காடுகளின் புல்வெளிகள்தான், மழைநீரைத் தேக்கிவைத்து, கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும் தண்ணீர்த் தொட்டிகள்.

 

அரிதிலும் அரிதான உயிர்ச்சூழல் மையமான மேற்குத் தொடர்ச்சி மலை,  654 வகை மரங்கள், லட்சக்கணக்கான பாலூட்டிகள், உயிரினங்களின் வாழ்விடமாகவும் திகழ்கிறது. ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாத நாம், இயற்கையை அழிக்கத் தொடங்கிவிட்டோம். மலையையும், வனத்தையும் பாதுகாக்க பல சட்டங்களைக் கொண்டுவந்தாலும், அவற்றை கான்கிரீட் காடுகளாக மாற்றுவதை யாரும் நிறுத்தவில்லை.

மலை பாதுகாப்பு இயக்கம்

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மீதான தாக்குதல்களால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், 1980-களின் இறுதியில் ஒன்றிணைந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கி, குமரியிலிருந்து கோவா வரை நடைபயணம், கருத்தரங்குகள், மாநாடுகள், சட்டப் போராட்டம் என தொடர் முயற்சிகளை மேற்கொண்டனர்.

கொஞ்சம் அசைந்து கொடுத்த மத்திய அரசு, முனைவர் மாதவ் காட்கில் தலைமையிலான குழுவை அமைத்தது. 2011-ல் அக்குழு தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்தபோதிலும், உரிய பயனில்லை.   கடந்த அக். 10-ல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்  57,000  சதுரகிலோமீட்டர் பரப்பை உயிர்ச்சூழல் பாதுகாப்பு பகுதியாக அறிவிப்பது தொடர்பான வரைவு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

 

இந்த நிலையில்தான், கோவையில் இம்மாத தொடக்கத்தில் திரண்ட இயற்கை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், `நமது மலை...நமது வாழ்வு...என்ற முழக்கத்துடன் 3 நாட்கள் மேற்குத் தொடர்ச்சி மலை தேசிய சூழலியல் திருவிழாவை நடத்தினர்.

6 மாநிலப் பிரதிநிதிகள்

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இருந்து இயற்கை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள், பழங்குடியின சமூக செயல்பாட்டாளர்கள், வேளாண்மை, வணிகம், ஊடகம், திரைத்துறை, கல்வி, தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

மாநாட்டின் தொடக்க விழாவில் பேசிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்க முதன்மை செயல்பாட்டாளரும், மானுடவியல் ஆய்வாளருமான கே.சி.மல்ஹோத்ரா, "மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பதற்காக ஏறத்தாழ 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மிகப் பெரிய மாநாடு இது. இயற்கையை நேசிப்பதும், அக்கறை செலுத்துவதும் நமது கலாச்சாரங்களில் ஒன்று. எனவே, பண்பாட்டோடு சேர்ந்து

இதை கொண்டுசெல்வது ஒவ்வொருவரின் கடமை. சூழல், இயற்கை பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது இந்த மாநாடு" என்றார் பெருமிதத்துடன்.

நன்றி உணர்வு அவசியம்!

"நாம் பருகும் தண்ணீரைத் தருவது மேற்குத் தொடர்ச்சி மலை. அதற்காக நாம் நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றங்களைத் தடுக்க மரங்களை நடுவதே தீர்வு. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதும் சூழலைப் பாதுகாக்கும். எனவே, இந்தியாவில் பிளாஸ்டிக் உற்பத்தியை முற்றிலும் தடுக்க வலியுறுத்தி, ஒவ்வொருவரும் தனித்தனியே பிரதமருக்கு கடிதம் அனுப்ப வேண்டும்" என்றார் டேராடூனில் உள்ள இந்திய வன உயிரினப் பயிலகத்தின் முன்னாள் டீன் ஏ.ஜே.டி.ஜான்சிங்.

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்க ஆலோசகர் குமார் கலானந்த மணி கூறும்போது, "2010-ல் கோத்தகிரியிலும், 2018-ல் கோவாவிலும் நடைபெற்ற கருத்தரங்குகளில், மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை, மத்திய, மாநில அரசுகளுக்குப் பரிந்துரைகளாக அனுப்பிவைத்தோம். எனினும், எந்த நடவடிக்கையும் இல்லை. சூழலை, இயற்கையைக் காக்க தீவிரமாய் முயற்சிப்போம் என இந்த மாநாட்டில் உறுதியேற்போம்" என்றார்.

மரக்கன்றுகள் வழங்கி பழங்குடிகள்

மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்புக்காகப் போராடிய, மறைந்த சூழலியல் ஆர்வலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நீலகிரி, ஆனைமலை, சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களான இருளர், கோத்தர், தோடர், சோளகர், ஊராளி சமூகத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர், இந்த மாநாட்டுக்கு  மரக்கன்றுகளைக் கொண்டு வந்திருந்தனர். அவற்றைப் பெற்றுக்கொண்ட கல்லூரி நிர்வாகம், அவை நட்டுப் பராமரிக்கப்பட்டு, சூழலியல் திருவிழா நினைவுப் பூங்காவாக மாற்றப்படும் என உறுதியளித்தனர்.

தென் மாநிலங்களில் உள்ள சூழலியல் பிரச்சினைகள், அவை தொடர்பான செயல்பாடுகளை ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதியும் விளக்கினர். தமிழகம் சார்பில் பேசிய பிரதிநிதிகள், மலைப் பகுதிகளில் காடுகளை அழித்து தோட்டங்களை உண்டாக்கியது, பின்னர் தோட்டங்களை அழித்து கட்டிடங்களை உருவாக்கியது,விலங்கு-மனித மோதல்,  நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தெல்லாம் விளக்கினர்.

தொடர்ந்து 6 அமர்வுகளில், காடு, காட்டுயிர், பல்லுயிர்ப் பாதிப்புகள், மனித-விலங்கு மோதல், பழங்குடி மக்களின் வரலாறு, பண்பாடு, தண்ணீர், விவசாயம், சுற்றுலா, வளர்ச்சிப் பணிகள், நில அமைப்பு மாற்றம், பருவநிலை மாறுதல், சட்டப் போராட்டங்கள், நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இயற்கை, சூற்றுச்சூழல் ஆர்வலர்கள், நீர் மேலாண்மை, வேளாண்மை, பொருளாதாரம், சட்டம், வன உயிரினத் துறை நிபுணர்கள், பழங்குடி மக்களுக்கான செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பேசினர்.  மாநாடு நடைபெற்ற 3 நாட்களிலும், நீலகிரி தோடர்கள், இருளர்களின் நடனங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த பாரம்பரிய இசை, நடனம், கலை நிகழ்ச்சிகள், கோவை மண்ணுக்கே உரிய ஜமாப்  இசை, உருமி மேளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள்  நடைபெற்றன.

கஜ யாத்திரை

டெல்லியில் உள்ள இந்திய வன உயிரின அறக்கட்டளை சார்பில், நாடெங்கும் யானைகள் வாழும் காடுகளையொட்டிய பகுதிகளில் விழிப்புணர்வுப் பயணம் மற்றும் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இந்த பயணத்தின் தொடக்க விழா `கஜயாத்திரை` என்ற பெயரில் இந்த மாநாட்டில் நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில், தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், இந்திய வன உயிரின அறக்கட்டளை நிர்வாகி அஷ்ரப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் க்ளாட் ஆல்வாரஸ், 57 ஆயிரம் சதுரகிலோமீட்டரை உயிர்ச்சூழல் முக்கியத்தும் வாய்ந்த பகுதியாக அறிவிக்க வேண்டுமென்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளை விவரித்தார்.

தொடர்ந்து, இளைஞர்களும் மேற்குத் தொடர்ச்சி மலையும், குழந்தைகளும் மேற்குத் தொடர்ச்சி மலையும், சூழல் பாதுகாப்பில் தமிழ் எழுத்தாளர்களின் பங்கு, ஊடகப் பங்களிப்பு, யானை வலசைப் பாதைகளைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் அந்தந்த துறை நிபுணர்கள் பங்கேற்ற கருத்தரங்குகள் நடைபெற்றன. 13 நாடுகளில் ஆசிய யானைகளின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வரும் டாக்டர் அஜய் தேசாய், தமிழக பசுமை இயக்கத் தலைவர் டாக்டர் வி.ஜீவானந்தம், சக்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குநர் நாகநாதன், தமிழ்ப் படைப்பாளிகள் கவிஞர் புவியரசு, இந்திரன், வரிதையா உள்ளிட்டோர், இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினர்.

`மேற்குத் தொடர்ச்சி மலைக்கான குரல்' என்ற தலைப்பில் நடைபெற்ற பொது அரங்கில், அரசு அதிகாரிகள், அறிவியலாளர்கள், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலர் பி.ஆர்.பாண்டியன், அருட்தந்தை ஜெகத்கஸ்பர், இயற்கை மருத்துவர் கு.சிவராமன், சோழ நாச்சியார், ஜெயரஞ்சன், பூவுலகின் நண்பர்கள் குழு சுந்தரராஜன் உள்ளிட்டோர் பேசினர். `பெண்களும், மேற்குத் தொடர்ச்சி மலையும்` என்ற தலைப்பில் பெண்களுக்கான பிரத்தியேக கருத்தரங்கும் நடைபெற்றது.   1987-ல் நடைபெற்ற மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு நடைபயணத்தில் பங்கேற்றோர் பாராட்டப்பட்டனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அமைப்பு, அரிய வகை பறவைகள், விலங்குகள், ஊர்வன, வண்ணத்துப்பூச்சிகள், தும்பி, பூச்சி வகைகள், மனித-விலங்கு மோதல் என 1600-க்கும் மேற்பட்ட புகைப்படங்களைக் கொண்ட புகைப்படக் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதபோல, பழங்குடி மக்கள், விவசாயிகளின் இயற்கைப் பொருட்கள் அங்காடியும் அமைக்கப்பட்டிருந்தது.

ஜப்பான் சூழலியல் ஆய்வாளர் `மசனாபு புகாகோ`வின் நூலை தமிழாக்கம் செய்து, டாக்டர் ஜீவானந்தம் எழுதிய `பாலைவனத்தில் விதை விதைத்தவன்` நூல், குழந்தைகளுக்கான சுற்றுச்சூழல் இதழான `மின்மினி`, பாறு கழுகுகள் தொடர்பான பாரதிதாசன் எழுதிய நூல், முனைவர் ராமகிருஷ்ணனின் பாறு கழுகுகள் குறித்த ஆய்வறிக்கை ஆகியவை இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டன. இறுதியாக,  மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க தனி சட்டமியற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் `கோவை பிரகடனம்` வெளியிடப்பட்டது.

கோவை பிரகடனம் சொல்வது என்ன?

இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்திருந்த, மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் ஓசை காளிதாசன் கூறும்போது, "6 மாநில மக்களின் வாழ்வாதாரம் மேற்குத் தொடர்ச்சி மலை. சோலைக்காடுகளின் புல்வெளிகள் இல்லாவிட்டால் நமக்குத் தண்ணீர் கிடைக்காது. ஆனால், மரங்கள் அழிப்பு, வனப் பரப்பு குறைவது, மலைப் பகுதிகளில் அதிகரிக்கும் கட்டிடங்கள், சுற்றுலா வளர்ச்சிக்காக இயற்கையை பாழ்படுத்துவது என இயற்கை மீதான தொடர் தாக்குதல்கள், எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பற்ற சூழலையே உருவாக்கும். பசுமை நிறைந்த தென்னகத்தை பாலைவனமாக்கிவிடக்கூடாது. அதற்காகத்தான், தொடர்ந்து போராடி வருகிறோம்.  மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க தனி சட்டத்தை இயற்ற வேண்டுமென குரல் கொடுத்து வருகிறோம்.

உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த மலைப் பகுதிகளின் தாங்கும் திறனையும் தாண்டி, லட்சக்கணக்கானோர் குவிவது சூழலுக்கும், இயற்கைத் தன்மைக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.  சுற்றுலா வளர்ச்சி தடுக்கப்பட வேண்டுமென நாங்கள் கோரவில்லை. இது, லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரம் என்பது தெரியும். எனவே, சுற்றுலாவின் வடிவத்தை மாற்ற வேண்டும். சட்டங்களை மீறி, சூழலை, இயற்கையைப் பாதிக்கச் செய்வோர் மீதும், ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யானைகளின் வலசைப் பாதைகளின் ஆக்கிரமிப்பால்தான், அவை ஊருக்குள் நுழைய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால், மனித-விலங்கு மோதல்கள் உருவாகினறன. எனவே, யானை வலசைப் பாதைகளைப் பாதுகாக்கவும் தனி சட்டங்களை இயற்றுவது அவசியம். இதன் மூலம், பேருயிரான யானைகளும், மனிதர்களும் பலியாவதைத் தடுக்க முடியும். அரிய உயிர்ச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களையும், சமவெளிப் பகுதிகளுக்கு மட்டுமே உரிய திட்டங்களையும் மலைப் பகுதிகளில் செயல்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மலைப் பகுதிக்கு ஏற்ற திட்டங்களை மட்டுமே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் செயல்படுத்த வேண்டும். இவற்றையே கோவை பிரகடனமாக இந்த தேசிய மாநாட்டில் வெளியிட்டோம். இவற்றை நிறைவேற்ற தொடர்ந்து போராடுவது என உறுதிமொழியும் ஏற்றோம்" என்றார்.

படங்கள்: ஜெ.மனோகரன், ஆர்.டால்ஸ்டாய்

 

"மனிதர்கள் உயிர் வாழ யானைகள்தான் முக்கியம்!" - யானைகள் குறித்த கருத்தரங்கில் தகவல்:
ராஜபாளையம் வன உயிரின சங்கம் சார்பில் யானைகளை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னதாக வத்திராயிருப்பில் இருந்து தொடங்கிய யானை நல உலா ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம் வழியாக ராஜபாளையத்தை வந்தடைந்தது. அப்போது வழியெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

யானைகள் அழிந்தால் காடு, ஆறு, தண்ணீர் இல்லாமல் மனிதனால் வாழவே முடியாத நிலை ஏற்படும். எனவே, யானைகளைப் பாதுகாக்க அதன் வாழிடம், வழித்தடங்களைக் காக்க வேண்டும் என கருத்தரங்கில் வன உயிரின ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

கருத்தரங்கில் யானைகள் வனத்தட ஆராய்ச்சியாளர் ராம்குமார் பேசும்போது, யானைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி 21-ம் தேதி கோயம்புத்தூரில் இந்தப் பயணம் தொடங்கியது. மேட்டுப்பாளையம், ஊட்டி, முதுமலை, வால்பாறை, சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் நடந்துள்ளது. யானைகள் தன் உணவுத் தேவைக்காகவும், தண்ணீருக்காகவும் ஆண்டொன்றுக்கு 300 முதல் 800 சதுர கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். இதனால் குறைந்தது இரண்டு வனப்பகுதிகளுக்காவது செல்லும். இந்த இரண்டு வனங்களையும் இணைக்கும் பாதையைத்தான் வழித்தடம் என்கிறோம். நாளொன்றுக்கு 20 மணி நேரம் நடக்கும். இந்தியாவில் மொத்தம் 101 வலசை பாதைகளும், தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக 16 வலசை பாதைகளும் உள்ளன.
குட்டியாக இருந்தபோது பயன்படுத்திய பாதைகளையே அவை பாரம்பர்யமாக பயன்படுத்தி வருகின்றன. 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை நிலமாற்றத்தால் தற்போது நிறைய மாறிவிட்டது. தென்னிந்தியாவில் காடுகள் தொடர்ச்சியாக உள்ளன. அவை வழித்தடங்கள் இணைத்துக் கொண்டிருக்கிறது. யானைகள் இல்லையென்றால் காடு இல்லை. ஆறு இல்லை. விவசாயிக்கு தண்ணீர் இல்லை. விவசாயம் இல்லை. மனிதன் வாழவே முடியாது. யானைகளைக் காப்பாற்ற வேண்டுமெனில் முதலில் அதன் வழித்தடங்களையும், வாழ்விடங்களையும் காப்பாற்ற வேண்டும். யானை இருந்தால்தான் மனிதர்களும் வாழ முடியும்” எனத் தெரிவித்தார்.
யானைகள் ஆராய்ச்சியாளர் ஆறுமுகம் பேசும்போது, ``யானைகள் மிகுந்த அறிவாளி விலங்குகள். ஆக்ரோஷமாக அந்த விலங்கு மனிதர்களோடு எளிதில் நண்பனாகிவிடும். 35 பேரை கொன்ற ஒரு யானை வாய் பேச முடியாத, காது கேளாத 12 வயது சிறுவனிடம் கட்டுப்பட்ட நிகழ்வும் இங்கே நடந்துள்ளது. வழித்தடம் அருகே வசிப்பவர்களுக்கு கொஞ்சம் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
யானைகள் நல மருத்துவர் கலைவாணன் பேசும்போது, ``யானைகள் முக்கியமா? மனிதர்கள் முக்கியமா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மனிதர்கள் உயிர் வாழ யானைகள்தான் முக்கியம். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். யானைகள் உப்பை அதிகமாக விரும்பி உண்ணும். காட்டில் எங்கே தாது உப்பு இருந்தாலும் தன்னுடைய மோப்ப சக்தியால் அதைத் தோண்டி எடுத்து சாப்பிடும். பின்னர் அதை பிற உயிரினங்களும் சாப்பிடும். சில நேரங்களில் காட்டுக்குள் விவசாயிகள் வைத்திருக்கும் உப்பை சாப்பிட வருகிறது. இதனால் சில நேரங்களில் அசம்பாவிதம் ஏற்படுகிறது. 10,000 ஆண்டுகளுக்கு முன் பனிப்பகுதியில் வாழ்ந்த மொரிசீரியம் என்ற 3 அடி உயர விலங்குதான் யானைகளின் மூதாதையர். ஆனால், பனிமலைகள் உருகியதால் அந்த இனம் அழிந்துபோனது. அதன் எச்சமாக கிடைத்த எலும்பை ஆய்வு செய்தபோது அதில் காசநோய்க்கான கிருமி இருந்தது. வன உயிரினங்களுக்கான நோய் தாக்கம் என்பது மனிதர்களுக்கு ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கை தான்.
ஆலமரத்தின் அடியில் லட்சக்கணக்கான விதைகள் இருந்தாலும் அவை செடியாக முளைக்காது. ஆனால், பறவைகளும், விலங்குகளும் உண்டு எச்சமாக வெளியேற்றும்போது பாறைகளில் கூட மரம் முளைக்கிறது. கடுக்காய் மரத்தின் கீழ் கிடக்கும் விதைகள் செடியாவதில்லை. ஆனால், மான் அவற்றை வாயில் வைத்து துப்பினால் அது முளைக்கிறது. வன உயிரினங்கள்தான் இயற்கையை சமநிலையோடு வைத்திருக்கும். இயற்கையைப் பாதுகாக்க யானை, புலிகளைப் பாதுகாக்க வேண்டும். நாங்கள் பிடித்துச் செல்லும் வன விலங்குகளை குழந்தைகளைப் போலவே பராமரிக்கிறோம். மனிதர்கள் இல்லாமல் வன உயிரினங்கள் வாழும். ஆனால், வன உயிரினங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது” எனத் தெரிவித்தார்.


நன்றி: இரா.கோசிமின்,விகடன்

Comments