New blog posts

ஆணைமலையும் யானைகளும்

11 August, 2019 by Administrator

திரு.K.தங்கராஜ் உடுமலைப்பேட்டை , அவர்களின்...

Ram Surendhar Image

31 July, 2019 by Aasaitamil

View all blog entries →

நமது குறிக்கோள்

உலகில் மனிதன் மட்டும் தனித்து வாழ முடியாது!

இயற்கை படைத்த பிற உயிர்களோடும் சேர்ந்தே வாழவேண்டும்!

காடுகளும், காட்டுயிர்களும் இல்லாத உலகில் மனிதனும் இருக்க மாட்டான்!

 காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு

உலகெங்கும் உள்ள மக்கள் அதை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து கொடுக்க வேண்டும்.


 

கோயில் காடுகள்

நீங்கள் கிராமத்து சாலைகளில் பயணம் செய்யும் போது அங்கு மலையடிவாரத்திலோ , ஆற்றங்கரையிலோ , ஏரிக்கரையிலோ பெரிய மீசையுடன் கையில் அரிவாளோடு பெரிய மண் குதிரை பொம்மைகளின் மேல் அமர்ந்துகொண்டு இருக்கும் சாமி சிலைகளை பார்த்துள்ளீர்களா ?

அதுதான் கோயில் காடுகள் , இயற்கையைப் பாதுகாக்கும் மரபானது பண்டைய காலம் தொட்டே நம் முன்னோர்களிடம் இருந்துள்ளது .
 
கோயில்காடுகள் அந்தந்த கிராமத்தில் கிராம காவல்காக்கும் தெய்வங்கள் வசிக்கவென்று மனிதர் தொடாமல் விடப்பட்டிருக்கும் பகுதி ஆகும்.
 
ஒரு  உதாரணத்திற்க்கு சொல்கிறேன். ஒரு கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பில் பெரிய நிலத்தில் விவசாயம் செய்கிறார்கள்.அந்த நிலத்துக்கு பயிர் வளர தண்ணீர் கிணற்றிலோ,ஆற்றிலிருந்தோ வந்து விடுகிறது .சூரியன் மூலம் ஒளிச்சேர்கை நடக்கும் ,
இது மட்டும் போதுமா ? பயிர் வளர்ந்து விடுமா ? 
 
இல்லை , முக்கியமாக மகரந்த சேர்க்கை நடக்கணும் இல்லையா , அதற்கு தேனீக்களும்,வண்ணத்துப்பூச்சிகளும் வேண்டும் அல்லவா, அந்த பயிர்களை அழிக்கும் பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற பறவைகள் வேண்டுமே , எலிகளிடமிருந்து காப்பாற்ற பாம்புகள் வேண்டுமே , அந்த மிகப்பெரிய நிலத்தில் இந்த தேனீக்களும், வண்ணத்துப்பூச்சிகளும், பறவைகளும், பாம்புகளும் எங்கிருந்து கிடைக்கும் கூறுங்கள் ?
 
அதற்கு ஒரு சின்ன காடு போன்ற பகுதியை உருவாக்கினோம் , அதற்குப் பெயர்தான் இந்த கோயில் காடுகள் .
 
ஆம் வேளாண்மை நிலத்தில் பல்லுயிர்ச் சூழலை உருவாக்கும் கோயில் காடுகள் , இந்த கோயில் காடுகள் என்பவை பெரும்பாலும் ஊருக்கு வெளியிலோ , வயல்களுக்கு மத்தியிலோ அமைந்த வனத்தீவுகள் .
 
இவைகளில் சிறுகோயிலோ அல்லது சிறுதெய்வ வழிபாட்டுக்குரிய மண் சிலைகளோ அல்லது தெய்வங்கள் பேரில் ஊன்றப்பட்ட ஆயுதங்களோ இருக்கும் , அவைகளைச் சூழ்ந்து மனித நடமாட்டம் இல்லாத வனப்பெருக்கமும் , அவ்வனப்பெருக்கத்துக்கு எற்ற சிற்றுயிர் வளமும் இருக்கும் . 
 
ஒவ்வொரு கிராமத்திலும் இப்படிப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஒரு இடம் தங்கள் மூதாதையர்கள் தங்கள் கிராமத்தை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையில் அமைக்கப்பட்டிருக்கிறது .
 
வேப்பமரம் , நாகலிங்க மரம் , வில்வமரம், அரச மரம், போன்ற மரங்கள் ஏராளாமான உதவிகளை மனிதனுக்கு செய்வதால் இவை பாதுக்கப்பட வேண்டும்  என்ற நோக்கத்தோடு கடவுளாக கருதப்பட்டு கிராமத்தில் ஒரு ஏக்கரா நிலமாவது இந்த கோவில்காடுக்காக ஒதுக்கப்பட்டு அதில் அம்மன் சிலைகளும் அய்யனார்,மதுரைவீரன் முனீஸ்வரன் சிலைகளும் வைக்கப்பட்டு அங்கு மண்ணால் செய்யப்பட்ட குதிரை மற்றும் மற்ற விலங்குகள் சிலைகள் நிறுத்தப்பட்டிருக்கும் , அம்மன், அய்யனார், மண்ணால் செய்யப்பட்ட குதிரை இல்லாத ஒரு கோவில்காட்டைப் பார்ப்பது கடினம் .
 
இக்காடுகளின் உள்ளே வெகு அரிதாகவே மனிதர்கள் செல்வதால் இங்கு இயற்கையான ஒரு வனதொகுப்பு பல்லாண்டுகளாக பேணப்படுகிறது , இதனால் வேளாண்மை என்ற பெயரால் இயற்கைச்சூழலும் , பாரம்பரிய தாவரங்களும் , சிற்றுயிர் வளமும் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. 
 
மேலும் இக்காடுகள் வயல்களுக்கு நடுவில் இருப்பதால் பறவைகள்/ பாம்புகள் போன்றவை தங்கி உணவுச்சங்கிலியைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவுகின்றன , இவ்வகையில் இவை விவசாயத்துக்கு நேரடியாக உதவுகின்றன , இவைகளைப் பற்றிய சமூகப் புரிதலும் தெய்வ வழிபாடும் இவ்வனத்தொகுதிகள் காப்பாற்றப்பட்டு வந்ததன் பின்னனியில் இருக்கின்றன . 
 
இவ்வகைக்கோயில்கள் காவிரி மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் அங்கு வேளாண்மை மிக அதிக அளவில் நடைபெற்றது.
 
இப்பகுதிகளில் இயற்கையின் பன்மைத்தன்மையை பாதுகாக்க எடுக்கப்பட்ட ஒரு சிறந்த முயற்சியாகவே இதை நாம் பார்க்க வேண்டும் .