சோலைக் காடுகள்

 • தமிழகத்தில் 30 சோலைக் காடுகள் உள்ளன. குட்டையான மரங்களும், புல்வெளிகளும் சேர்ந்ததுதான் சோலைக்காடுகள். இக்காடுகள் நீர்வள ஆதாரத்துக்கு உதவுகின்றன. சோலைக்காட் டில் உள்ள மரங்கள் வேரில் மழை நீரை சேமித்து வைத்து சிறிது சிறிதாக வெளியேற் றும். புல்வெளியில் பஞ்சு போன்ற அமைப்பும் மழை நீரை சேமிக்கும். சோலைக்காட்டின் மண் பரப்பும் மழை நீரைச் சேமிக்கும். இந்த நீர் ஆதார அமைப்புகள் மூலம்தான் அருவிகள், ஆறுகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது.
  • தற்போது அருவிகள், ஆறுகளில் வறண்டு போனதற்கு சோலைக்காடுகளின் அழிவும் ஒரு காரணம். சோலைக்காடுகள் அழிவதால் மழைப்பொழிவும், வன விலங்குகளின் எண் ணிக்கையும் குறைகிறது. அரியவகை தாவரங் கள் தண்ணீர் இல்லாமல் அழிகின்றன.
   • சுற்றுலாப் பயணிகள் வீசும் பிளாஸ்டிக் பொருட்கள், வேட்டில், பைன், யூகலிப்டஸ், அக்சேசியா உள்ளிட்ட அந்நிய மரங்கள், களைச்செடிகள் சோலைக்காடுகள் அழிவுக்கு முக்கியக் காரணம். பைன் மரங்களில் இருக்கும் ஒருவகை வேதியியல் பொருள், மரங்களுடைய முளைப்புத் திறனை குறைக்கிறது. வனப்பகுதியில் காபி, நறுமணப் பயிர்கள் சாகுபடியாலும் சோலைக் காடுகள் அழிகின்றன….

 

சோகத்தில் சலைக்காடுகள்..!

 • வனங்களில் மிகவும் வயதான… அடர்ந்த, உயிர்பன்மயம் நிறைந்தவை சோலைக்காடுகள். ஒரு சோலைக்காடு உருவாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். மனிதன் செயற்கையாக சோலைகாடுகளை உருவாக்க நினைத்தால் 200 ஆண்டுகள் ஆகும்.. அதுவும் இயற்கை காடுகளில் 25% அளவுக்குத்தான் இருக்கும் என்கிறார்கள் வன ஆராய்ச்சியாளர்கள்.சூரிய ஒளியைக்கூட வடிகட்டி அனுப்பும் அளவுக்கு தாவர வலை பின்னலால் சூழப்பட்ட சோலைக்காடுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும் சூழல் சீர்கேடுகளுக்கு ஒரு முக்கிய காரணம். வனபகுதிக்குள் ஆதி மனிதன் இருந்தவரை எந்த பிரச்னையும் இல்லை… ஆனால், ஆன்ட்ராய்ட் மனிதனின் வருகைக்கு பிறகு, வனம் தனது வனப்பை இழந்து ஊனமடைந்து விட்டது.
 • வனவளம் தான் பூமியையும்… அதில் வாழும் உயிர்களையும் வளமாக வாழ வைக்கக் கூடியது. மழைநீரும், ஊற்று நீரும் மலைகளின் மீது வழிந்தோடும்போது அங்குள்ள காடுகள் அந்த நீரை பஞ்சு போல உறிஞ்சு வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும். அப்படி வெளியேறும் நீர் ஆற்றில் கலந்து காட்டையும், நாட்டையும் வளப்படுத்தும். அப்படிப்பட்ட சோலைகாடுகளின் அழிவுதான் இன்றைக்கு இருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கான முக்கிய காரணம்.
 • இதை பற்றி பேசும் ஓய்வு பெற்ற உதவி வன பாதுகாவலர் ராஜசேகரன், ”கொடைக்கானல், நீலகிரி என மேற்கு தொடர்ச்சி மலை மடிப்புகள் முழுவதும் சோலைகாடுகளால் ஆனவை. இந்த காடுகள் வளமாக இருந்தவரை இந்த பகுதிகள் செழிப்பாகத் தான் இருந்தன. சின்ன புல்லினம் தொடங்கி, வானுயர்ந்த தாவரங்கள் வரை… சிற்றெறும்பில் தொடங்கி யானை வரை பலவிதமான உருவங்களை, குணங்களைக் கொண்ட உயிர்பன்மயச் சூழல் அழகாக இயங்கி வந்தது. பூச்சிகள், தவளைகள், வண்ணத்துப்பூச்சிகள், புலி, சிங்கம், யானை என அனைத்து உயிர்களும் வாழும் சூழல் அங்கு நிலவியது. வற்றாத ஜீவநதிகள் ஒடின.. மொத்தத்தில் உயிர்சூழலின் தாய்மடியாக விளங்கின சோலைக்காடுகள்.

 

 • ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகு இது அத்தனையும் அடியோடு மாறியது. கொடைக்கானல் மலையில் சோலைக்காடுகளை அழித்து விறகுக்காகவும், தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்காகவும், யூக்கலிப்டஸ், பைன், வாட்டில் மரங்களை நடவு செய்தார்கள். வால்பாறை, நீலகிரி பகுதியில் இருந்த காடுகளை அழித்து தேயிலையை பயிரிட்டார்கள். இந்த காடுகளின் அழிவால் உயிர்பன்மயம் சிதைந்தது. மழை குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் உயிர்காக்கும் மருந்துகளில் 80% சோலைகாடுகளில் கிடைக்கும் மூலிகைகளின் மூலக்கூறுகள் இருக்கின்றன. இன்னும் நம் அறிவுக்கு எட்டாத ஆயிரம் ஆயிரம் மூலிகைகள் இருக்கின்றன்.

 

 • இவ்வளவு மகத்துவம் வாய்ந்த சோலைக்காடுகளுக்குள் சுற்றுலா என்ற பெயரில் அத்துமீறி நுழைந்து, பிளாஸ்டிக், மதுபான புட்டிகள் என எறிந்து செல்கிறோமே..இது எந்த வகையில் நியாயம்..? நம்மால் ஆக்க முடியாத ஓன்றை அழிப்பது முட்டாள்தனமில்லையா. நண்பர்களே இனி வனங்களை உங்கள் வாழ்க்கைகான ஆதாரமாக பாருங்கள். அப்போதுதான் சூழலை பிடித்த சூனியம் விலகும்” என்றார்.

 

 • இது குறித்து பேசிய கொடைக்கானலைச் சேர்ந்த சமூக ஆர்வலரான வீரபத்திரன், ”50 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் புல்வெளிகளாலும், சோலைக்காடுகளாலும் சூழப்பட்டு இயற்கையின் தாய்மடியாக இருந்தது. 72 வகையான பறவைகள், 120 வகையான இயற்கை தாவரங்கள், ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருந்தன. ஆனால், சோலைகாடுகள் அழிவிற்கு பிறகு, பல விலங்குகள் காணாமல் போய்விட்டன. பல அரிய மூலிகைகள் அழிந்து விட்டன. பியர் சோலா, டைகர் சோலா என பல இடங்களுக்கு பெயர் இருக்கிறது. கரடி, புலி போன்ற விலங்குகள் அதிகமாக காணப்படும் பகுதிகள் என்பதால் தான் அந்த பகுதிகளுக்கு அந்த பெயர் வைத்து அழைத்தார்கள். இதில் பல விலங்குகள் அழிந்தது மட்டுமல்லாமல், இருக்கும் சில விலங்குகளின் குணங்களும் மாறி விட்டதுதான் வேதனை.

 

 • செயற்கை காடுகளால், நீர், உணவு இன்றி தவிக்கும் உயிரினங்கள், கிடைப்பதை தின்று உயிர்வாழ பழகிவிட்டன. வாட்டில் மரத்தின் விதைகளை உண்கிறது கருங்குரங்கு.. காட்டுமாடுகள் சர்வசாதாரணமாக குடியிருப்பு பகுதிக்குள் வந்து பழைய சோறை சாப்பிட்டு போகிறது. தற்சார்பாக, இயற்கையை இம்சிக்காமல், உயிர்பன்மயத்திற்கு ஊறு விளைவிக்காமல் வாழும் உயிரினங்கள், மனிதர்களைப் போல பிச்சை எடுத்து உண்ணும் இழிநிலைக்கு தள்ளியிருக்கிறது நமது அதீத ஆசையும், நுகர்வு வெறியும்.

 

 • தற்போது கொடைக்கானல் பகுதியில் செயற்கை காடுகளை அழித்து இயற்கை காடுகளை உருவாக்கும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதுவும் பெயரளவில்தான் இருக்கிறது. போனது போகட்டும்.. இயற்கையை காக்க நாம் எதுவும் செய்ய வேண்டாம். இருப்பதை இம்சிக்காமல், சீர்படுத்த முடியாவிட்டாலும் சிதைக்காமல் இருந்தால் அதுவே இயற்கைக்கு நாம் செய்யும் சிறந்த கைமாறு” என்றார்

 

 • – ஆர்.குமரேசன்.நன்றி: விகடன்