காட்டு பள்ளிகள்

புவிதம் – மாற்று கல்வியல் முறை

 

 •      தருமபுரி அருகே நாகர்கூடல் என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ளது புவிதம் என்ற கல்வி மையம்.நாம் இன்று மாற்று கல்வி முறை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம் ! ஆனால் 15 வருடத்திற்கு முன்னரே அதனை ஆரம்பித்து இன்றுவரை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் மீனாட்சி அம்மாவிற்கு முதலில் மிகப்பெரிய நன்றியினையும் ,வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்ள வேண்டும்.

 

 •                 அவர் 20 வருடங்களுக்கு முன்னர் வேளாண்மை செய்வதற்கு தற்போது பள்ளி இருக்கும் இடத்தை வாங்கி உள்ளார் .ஆனால் அந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் படிக்காது, வேலைக்காக வேற ஊருக்கு செல்வதும் ,முக்கியமாக பெண்குழந்தைகள் இளமைவயதிலேயே திருமணம் செய்து கொள்வதையும் அறிந்து அவர்களுக்கு கல்வி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து ,வேளாண்மைகாக வாங்கிய நிலத்தில் , பள்ளியை தொடங்கி உள்ளார்..மேலும் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு விடுதி வசதியும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது .பள்ளிகளிலும் ,விடுதிகளிலும் பெரும்பாலும் சிறுதானிய உணவுகளே அளிக்கப்படுகிறது.

 

 •                   LKG பிள்ளைகளுக்கே ஆண்டுக்கு 5 முறை தேர்வு நடத்தும் அறிவார்ந்த பள்ளிகள் இருக்கும் இந்த காலகட்டத்தில் , இந்த பள்ளியில் 5ம் வகுப்பு வரை தேர்வுகளே வைக்க படுவதில்லை என்பது அனைவரையும்  வியக்க வைத்தது.இங்கு மதிப்பெண்களால் குழந்தைகள் பிரிக்கபடுவதில்லை.சிறுவயதிலேயே அவர்களின் விருப்பத்தை அறிந்து கல்வி கற்கப்படுகிறது.பெரும்பாலும் செயல் வழி கல்வி முறையே இங்கு கற்பிக்கப்படுகிறது.எல்லாவற்றிற்கும் மேலாக  மாலை வேளையில் குழந்தைகளுக்கு வேளாண்மை கற்பிக்கப்படுகிறது.வேளாண்மையின் முழு பருவமும் அவர்களுக்கு சொல்லி தருவதோடு அல்லாமல் ,அவர்களையே அதில் ஈடுபடுத்தி வருகின்றனர்.சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டிய  அவசியத்தையும் ,நீரின்றி அமையாது உலகு என்பதனை இளம்வயதிலேயே சொல்வடிவதோடு,செயல்வடிவமாகவும் கற்பிக்கின்றனர்.

         

 •                    தாங்கள் கற்கும் போதே தனக்கான உணவையும்  உற்பத்தி செய்ய கற்றுகொடுக்கும் முறை ,எந்த பல்கழைகழகங்களிலும் சொல்லிதரபடாதது . மேலும் தையற்கலை ,கைவினை பொருட்கள் உள்ளிட்ட சுயதொழில்களும் கற்றுத்தரப்படுகிறது . இவை அந்தந்த மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சொல்லி தரபடுகிறது.மெக்காலே கல்வி முறையால் ஒன்றும் பயனில்லை.தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற அனுபவ கல்வியே தற்போதைய சூழ்நிலைக்கு மிக அவசியமானது என்பதை அவர்களிடம் அறியமுடிந்தது.

 

 •             பள்ளி வடிவமைப்பு முறை மிகவும் நுண்ணியமாக,சுற்றுசூழலுக்கு உகந்த முறையில் வடிவமைக்க பட்டுஇருந்தது.குழந்தைகள் அனைவரையும் தினமும்  விருப்பத்தோடு பள்ளிக்கு வர செய்வதே ,ஒரு பள்ளியின் முதல் வெற்றி. அங்கு வந்த குழந்தைகளிடம் அதற்கான புன்னகையை பார்க்க முடிந்தது!இங்கு படிக்கும் குழந்தைகள் யாரும் ஆசிரியரை சார் என கூப்பிடுவதில்லை.அண்ணன் ,அக்கா என்றே ஆசிரியரை அழைக்கின்றனர் .ஆசிரியர்களுக்கும் ,மாணவர்களுக்குமான தொடர்பு சக மனித உறவாகவே பிணைக்கப்பட்டுள்ளது.

 

 •      8ம் வகுப்பிற்கு  பிறகு அருகே உள்ள அரசாங்க பள்ளிகளில் மாணவ ,மாணவிகள் சேர்க்கபடுவதால்,அங்குள்ள தேர்வு முறைக்கு பயிற்றுவிக்கும் விதமாக ,இங்கு 6 ம் வகுப்பில் இருந்து அரசாங்க பாடதிட்டமே சொல்லி தரபடுகிறது.இருப்பினும் பள்ளியை விட்டு செல்லும் குழந்தைகள் அனைவரும் ,தனித்து இயங்க கூடிய  சுயசார்பு தன்மையையும் ,மேலும் மதிப்பெண்களால் தங்கள் வாழ்வு ஒருபோதும்  நிர்ணயிக்கபடாது என்பதையும் உணர்ந்தே செல்கின்றனர். அங்கு கல்வி மட்டும் போதிக்கபடுவதில்லை.ஒரு மனிதனுக்கு தேவையான முழுமையான வாழ்வியல் முறையும் சேர்ந்தே கற்ப்பிக்கபடுகிறது.

குக்கூ காட்டு பள்ளி

 

 

 • நாம் நம் நீண்ட கால செயலினூடாக சென்று சேர இருக்கின்ற நிலம் செம்மண்ணோடு ஜவ்வாது மலை அடிவாரத்தில் தாவரங்கள் முளைத்து பூமி மீது படர்ந்திருக்கிறது.

 

 • சமூகத்திற்கு வெளியேயும், கானகத்திற்கு உள்ளேயும் இயற்கையை கவனிக்கவும், மனித மாண்பையும், சமூகத்தை கற்கவும் பிறர் மனம் நோகா அறநெறியோடும், கலாச்சாரப் பண்பாட்டு மன அழுத்தங்களிலிருந்து விடைபெற்று, நிபந்தையற்ற அன்பு, எல்லையற்ற காருண்யம், இணைக்கப்பட்ட ஆன்மாக்களின் பன்நிற பயணம். தன்னிலையில் உயிர்த்திருக்கும் இயல்பூக்க கற்றலின் கொட்டகையொன்றை நாம் அனைவரின் கரம் கொண்டு நெய்ய உள்ளோம். கல்வி நல்சூழல் பறிக்கப்பட்ட குழந்தைகளின் அதிகாலையாகவும், மறக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட முதியவர்களுக்கான ஓய்விடமாகவும், தாலாட்டும் அந்தியாகவும் அந்நிலம் இருக்கும்…அங்கே குழந்தைகள் களங்கமற்ற குதூகலத்தையும், முதியவர்கள் தங்கள் வாழ்வனுபவ ஞானத்தின் எல்லையின்மைகளை விரல் கோர்த்துக்கொள்ளலாம்…

 

 • இயற்கைக்கு விரோதமற்ற நிஜமான மனித தேவைகளுக்கான, மரபான தொழில்நுட்பங்கள், இயற்கை வழி நிரந்தர வேளாண்மை, காலத்திலிருந்து விடுபட்டு பன்முக பருவங்களின் வியாபித்தல்களை உணர்தல், இயற்கையை, சமூகத்தை, வாழ்வை கவனித்து கற்றல் மூலம் யாவர் காலடியில் இருந்தும் விழிப்புணர்வின் பாதை தோன்றும். சொல், எழுத்து, பொருள், தொழில் முழுமை ஆக்கம் இவை யாவும் கற்று இயற்கையில் தெளிதல் அதற்கான சிறு தொட்டில்தான் அந் நிலம்…

 

 • அங்கிருந்துதான் தொடங்குகிறது நம் பயணமும், வனமும், காட்டாறும்…இன்னும் பிறக்காத சந்ததியும், குழந்தைகளும் காணும் தங்களுக்கான கனவே…நம்மை உள்ளிருந்து செயல்பட தூண்டுகின்றன.

 

 • கர்ப்பமுற்ற பன்றி தான் ஈனப்போகும் குட்டிகளுக்காக முள்ளாலும் வேர்களாலும் கற்களாலும் குட்டிகளுக்கு மெத்தையை பின்னுவது போலதான் நாம் நம் ஒருமித்த ஆன்மாவில் இணைகிறோம். குக்கூ காட்டுப்பள்ளியின் கற்றல் சூழமையில், ஒரு மின்னல் வெட்டில் காளானாக பூக்கலாம், அறிவின் விடுபடலில் வண்ணத்துப் பூச்சியாக பறக்கலாம். ஒரு கேள்விக்கு பதிலாக அல்லாமல் மலராக யாவரும் நம் ஒற்றை ஆன்மாவில் மலரலாம்…

குக்கூ குழந்தைகள் வெளி