WhatsApp Image 2020-08-12 at 8.46.06 AM

மேற்கு தொடர்ச்சி மலையை அறிவோம்

 

 •  தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரம்பித்து கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத்வரை  சங்கிலித்தொடர் போல் 1600 கி.மீ. தொலைவு வரை பரவிக் கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலையானது தென்னிந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது.

 

 • இந்த மலைத்தொடர், அரபிக்கடலில் இருந்துவரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து தென்மாநிலங்களுக்கு நல்ல மழையைத் தருகிறது, வெப்ப காலத்தில் அதிகம் வெப்பம் தாக்காதவாறும், குளிர்காலத்தில் அதிக குளிர் தாக்காதவாறும் தென்னிந்தியாவின் பருவகால நிலையை பாதுகாக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையானது இமயமலையைவிட பழமையானது. உலகின் வன வளங்கள் மிகுந்த 32 இடங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் 50 அணைக்கட்டுகள், 126  ஆறுகள், 29 நீர்வீழ்ச்சிகள், கொடைக்கானல், ஊட்டி, நீலகிரி, மூணாறு உள்ளிட்ட சர்வதேச கோடைவாழிடங்கள், பழநி முருகன் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட  புகழ்பெற்ற கோயில்கள் , ஆண்டு முழுவதும்  மழைப்பொழிவைக் கொடுக்கும் முள்புதர் காடுகள், புல்வெளிப் பிரதேசங்கள், சோலைக்காடுகள், பசுமைமாறா காடுகள் உள்ளிட்ட இயற்கை அன்னையின் அனைத்து அதிசயங்களையும் பெற்றுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை, உலகின் பாரம்பரியமிக்க இடமாக யுனெஸ்கோ 2012ம் ஆண்டு அறிவித்தது. ஆனால் மனிதர்களின் ஆடம்பர, மேலைநாட்டு கலாச்சார மோகத்தால் உலக பாரம்பரியமிக்க இந்த மேற்கு தொடர்ச்சி மலை மெல்ல மெல்ல அழிந்து பாரம்பரியத்தை இழந்துவருவது வருத்தமளிப்பதாக உள்ளது.

 

 • 35 சிகரங்களைக் கொண்ட இம்மலைத் தொடரில் இந்தியாவிலேயே யானைகள் அதிகஅளவில் உள்ளன. இதுதவிர, புலி, சிறுத்தை, ஆடு உள்ளிட்ட 139 வகை பாலூட்டி விலங்குகள் உள்ளன.7,402 பூக்கும் தாவரங்கள், 1,814 பூக்காத தாவரங்கள், மூலிகைச்செடிகள், 10 வகையான காட்டுத் தேனீக்கள், 6,000 வகையான பூச்சிகள், 508 வகையான பறவையினங்கள், 179 வகையான நீர் –  நில வாழ்வன, 288 வகையான மீன் வகைகள் உள்ளன.கனிமவளம் மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டிக் கிடக்கிறது. தேசிய பூங்காக்கள் 14,  வன உயிரின சரணாலயங்கள் 44,   புலிகள் காப்பகங்கள் 11, ஆகியன உள்ளன.
 • கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரவருணி உள்ளிட்ட பெரிய ஆறுகள், மணிமுத்தாறு, தென்பெண்ணையாறு, மணிமுத்தாறு, வைகை, பெரியாறு உள்ளிட்ட சிற்றாறுகள் போன்ற தென்னிந்தியாவின் 126 முக்கிய ஆறுகள், மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வங்காள விரிகுடா, அரபிக் கடலில் கலக்கின்றன. தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த விவசாய நிலங்கள், குடிநீர் தேவை இந்த ஆறுகளையே நம்பியுள்ளன.

 

 • மேற்கு தொடர்ச்சி மலையில் குற்றாலம், அகஸ்தியர், சுருளி, வெள்ளிநீர் வீழ்ச்சி, சுஞ்சனா சுட்டே, சோகக், சாலக்குடி, கல்கட்டி, உஞ்சள்ளி, பாணதீர்த்தம், சத்தோடு, சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா பயணிகளைக் கவர்ந்த நீர்வீழ்ச்சிகள் ஏராளம் உள்ளன. ஊட்டி ஏரி, கொடைக்கானல் ஏரி, பேரிஜம் ஏரி, பூக்காடு ஏரி, தேவிக்குளம் ஏரி, லிட்சினி யானை ஏரி உள்ளிட்ட சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் ஏரிகளும் உள்ளன.
 • தண்ணீர் தேவைக்காக கோடை வாசஸ்தலங்களில் உருவாக்கப்படும் ஆழ்துளை கிணறுகளால் பாறைகளிடையே இடைவெளி அதிகரித்து அடிக்கடி மண்சரிவு ஏற்படுகிறது. இந்த மலையின் இயற்கை நீர் ஆதாரம், பாறை வளம், மண் வளம் சுரண்டப்படுவதால் பருவநிலை மாறி மழை பொய்த்து தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பின்னோக்கி செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

 • ஒரு சதவீதத்துக்கு குறைவான உப்புத் தன்மை கொண்ட நீரே நன்னீர் எனப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடும், ஆறுகள், ஏரிகள், நிலத்தடி நீர் முழுமையும், நன்னீராகவே கிடைக்கின்றன. பெருகிவரும் கட்டிடத்தால் இந்த நன்னீர் மாசு அடைந்துள்ளதால் மீன், நத்தை, தவளை, தட்டான் உள்ளிட்ட 1,146 நன்னீர் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், பாரம்பரியமிக்க இந்த மலையை 24 மணி நேரமும் பாதுகாத்தால் மட்டுமே நாமும், நமது சந்ததியினரும் உயிர் வாழ முடியும்.

மாதவ் காட்கில் குழு :-

 • பருவநிலை மாற்றத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், புவியியல்  மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இந்திய அரசுக்கு பரிந்துரை செய்யவும், மத்திய அரசு பேராசிரியர் மாதவ் காட்கில்  தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2010 மார்ச் 4 அன்று அமைத்தது. இந்தக்குழு தனது அறிக்கையை 2011 ஆகஸ்ட் 30 அன்று மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்த அறிக்கையை 2012, மே – 23ந்தேதி இணையதளத்தில் வெளியிட்டு, கருத்துகளையும், விமர்சனங்களையும் அனுப்புமாறு கேட்டுக்கொண்டது. அரசால் பிராந்திய மொழிகளில் இவ்வறிக்கை 2014 வரை மொழி பெயர்க்கப்படவில்லை. 1700 பேர் மட்டுமே இவ்வறிக்கை தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இதிலும் 30 சதவீத பேர் மட்டுமே அறிக்கைக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மாதவ் காட்கில் அறிக்கையை திறம்பட அமல்படுத்தும் வகையில் செயல்திட்டம் ஒன்றை உருவாக்க டாக்டர் கஸ்தூரிரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றை 2012 ஆகஸ்ட் 17 அன்று மத்திய அரசு அமைத்தது.

 

 • இந்திய அரசு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியைப் பாதுகாக்க 2010 மார்ச்சில் சுற்றுச் சூழல் பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை (Western Ghats Ecology Expert Panel – WGEEP) அமைத்தது. காட்கில் குழு மேற்கு மலைத் தொடர் பகுதிகளை ஆய்வு செய்து, அறிக்கையை 2012 ஆகஸ்டு 30 இல் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் வழங்கியது.
 • மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் தற்போதைய சுற்றுச் சூழல் நிலை, நுட்பமான சுற்றுச்சூழல் பகுதிகளைக் கண்டறிவது இயற்கையை பாதுகாக்க மேம்படுத்த மற்றும் தேவையான நடவடிக்கைகள், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி ஆணையம் அமைப்பது நிலுவையில் உள்ள சுற்றுச் சூழல் அனுமதிக்காகக் காத்திருக்கும் திட்டங்கள் பற்றிய மதிப்பீடு தயாரிப்பது போன்ற பணிகள் காட்கில் குழுவிற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வழி காட்டுதலாக அளிக்கப்பட்டன. இவற்றின் அடிப்படையில், மாதவ் காட்கில் குழு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை மூன்று பிரிவுகளாகப் பிரித்தது.

 

 • அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் ((Ecologically Sensitive Zone) ஒன்று, இரண்டு மற்றும் மூன்று என ((ESZ-1, ESZ-2, ESZ-3) பிரிக்கப்பட்டது.மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 1, 29, 037 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், அதிநுட்பமான சுற்றுச்சூழல் மண்டலமாகவும் காட்கில் குழு அறிக்கை பரிந்துரைத்தது. இந்த பகுதிகள் உயர் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டு, கடல் மட்டத்திலிருந்து 2, 000 மீட்டர் உயரத்திற்கு மேல் வரும் கட்டடங்களை இடிப்பதுடன், அங்குள்ளவர்களையும் வெளியேற்ற வேண்டும்.வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால் காடுகளை அழிப்பது, ஆறுகளின் போக்குகளை மாற்றி அமைப்பது, அனல்மின் நிலையங்கள் அமைப்பது போன்றவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று காட்கில் குழு அறிக்கை தெரிவித்தது.
 • அதிநுட்பமான சுற்றுச்சூழல் மண்டலம் ஒன்று என (ESZ-1)அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் புதிய அணைகள் கட்டக் கூடாது என்று காட்கில் குழு திட்ட வட்டமாகக் கூறியது. கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவி குளம், பீர்மேடு போன்ற வட்டங்கள் சுற்றுச் சூழல் மண்டலம் ஒன்றின் கீழ் வருகின்றன. இங்குள்ள முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு, புதிய அணை கட்ட வேண்டும் என்று துடிக்கும் கேரள அரசுக்கு காட்கில் குழு பரிந்துரைகள் பெரும் தடையாக அமைந்தது. எனவே, கேரள மாநிலமும், மகாராஷ்டிரா, கோவா, குஜராத் போன்ற மாநிலங்களும் மாதவ் காட்கில் குழு அறிக்கையை எதிர்த்தன.

 

 • இதனால், மத்திய சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறை மாதவ் காட்கில் குழு பரிந்துரைகளை (WGEEP) மறு ஆய்வு செய்வதற்கு திட்டக்குழு உறுப்பினர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான 10 பேர் அடங்கிய இன்னொரு குழுவை(High Level Working Group-HLWG) அமைத்தது. கஸ்தூரிரங்கன் குழு 2012 ஆகஸ்டு 17இல் அமைக்கப்பட்டு, 2013 ஏப்ரல் 15இல் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்தது.
 • கஸ்தூரி ரங்கன் குழு, மாதவ் காட்கில் குழுவின் பரிந்துரைகளில் அடிப்படையான சிலவற்றை ஏற்றுக்கொண்டது. ஆனால், அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலங்கள் என்று மூன்று இனங்களாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளைப் பிரித்ததை இக்குழு ஏற்கவில்லை. காட்கில் குழுவின் பரிந்துரைகளின் படி, சில மண்டலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கஸ்தூரிரங்கன் குழு மேற்குத் தொடர்ச்சி மலையில் அடையாளம் கண்ட 1, 64, 280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதி முழுவதும் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பகுதி (ESA) என்று அறிவித்தது. இவற்றில் சுமார் 60 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் வளர்ச்சித் திட்டங்களைத் தடை செய்ய வேண்டும் என்று (37 சதவீதப்பகுதிகளில்) பரிந்துரைத்து, மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியை பாரம்பரிய நிலப்பகுதி (Cultural) மற்றும் இயற்கையான நிலப்பகுதி (Natural land Scape) என்று இரு இனங்களாக வகை செய்தது இதில் பாரம்பரிய நிலப் பகுதிகளில் விவசாய நிலங்கள், தோட்டங்கள், மக்கள் வசிப்பிடங்கள் என்று 58.44 சதவீதப் பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. மீதமுள்ள மற்றப் பகுதிகளில் 90 சதவீதம் இயற்கைப் பகுதிகள் என்று அடையாளம் காணப்பட்டு, அவை அதிநுட்பமான சுற்றுச் சூழல் பகுதியாக (Ecologically Sensitive Area -ESA) கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது. இதன்படி குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 188 வட்டங்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பகுதிக்குள் வருகின்றன. இவற்றில் சுமார் 4,000 கிராமங்கள் அடங்கி உள்ளன. மேலும் 40 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
 • இந்தக் குழுவின் அறிக்கையின் படி கேரள மாநிலத்தில்தான் அதிக ஆக்கிரமிப் புகள் உள்ளன. இங்கு உள்ள 123 மலையக கிராமங்கள் சுற்றுச்சூழல் பகுதிக்குள் வருகின்றன.

 

 • கஸ்தூரிரங்கன் குழுவின் முக்கியப் பரிந்துரைகள் வருமாறு:-

 

 • 🍀 மேற்குத் தொடர்ச்சி மலையில் 37 கதவீதம் பகுதி இயற்கை பாதுகாப்புப் பகுதி யாக விளங்குகிறது. இந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். மேலும் ஆக்கிரமிப்புகள் உருவாக அனுமதிக்கக்கூடாது.

 

 • 🍀 இப்பகுதிகளில் 20 ஆயிரம் சதுர மீட்டர் அல்லது அதற்கு மேல் எவ்விதமான கட்டடங்களும் கட்டக்கூடாது.

 

 • 🍀 பாதுகாக்கப்பட்ட இந்தப் பகுதிகளில் 50 ஹெக்டேருக்கு மேல் நகரியங்களை அமைக்கக்கூடாது.

 

 • 🍀 இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மணல் குவாரிகளோ, எந்த விதமான சுரங்கப் பணிகளோ மேற்கொள்ளக்கூடாது.

 

 • 🍀 சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அனல் மின் நிலையங்களை அமைக்கக் கூடாது.

 

 • 🍀 எண்ணெய் தொழிற்சாலை சிமெண்ட் தொழிற்சாலை, பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளை அமைக்கக் கூடாது.ஏற்கனவே செய்யப்பட்டு வரும் இத்தகைய தொழிற்சாலைகளை உடனே தடை செய்ய வேண்டும்.

 

 • 🍀 முறையான விதிமுறைகளுக்கு உட்பட்டு, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், காற்றாலை மின் திட்டங்கள், நீர் மின் திட்டங்கள் ஆகியவற்றை அமைக்கலாம். ஆனால், இதனை மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கண்காணிக்க வேண்டும்.

 

 • மாதவ் காட்கில் குறிப்பிட்டது போன்று அகஸ்திய மலையினைத் தலையாகவும், நீலகிரியினையும், ஆனைமலையினையும் மார்புகளாகவும், கனரா முதல் கோவா வரை நீண்ட உதடுகளையும் வடக்கு சகயதிரியினை கால்களாகவும் கொண்ட பெண் அவள். ஒரு காலத்தில் பளபளக்கும் பச்சை உடையுடன் செழுத்திருந்த அவள் உடைகள் சுயநல சக்திகளால் கிழித்தெறியப்பட்டு அவமரியாதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணாக இன்று காட்சி தருகின்றாள்.

 

 • 🍀பூவுலகின் நண்பர்கள்☔